< Back
மாநில செய்திகள்
தாத்தாவை வெட்டிக்கொலை செய்த பேரன் - திருமண அழைப்பிதழில் பெயர் இல்லாததால் ஆத்திரம்
மாநில செய்திகள்

தாத்தாவை வெட்டிக்கொலை செய்த பேரன் - திருமண அழைப்பிதழில் பெயர் இல்லாததால் ஆத்திரம்

தினத்தந்தி
|
31 Aug 2023 6:51 PM IST

திருமண அழைப்பிதழில் பெயர் இல்லாததால் ஆத்திரத்தில் தாத்தாவை பேரன் வெட்டிக்கொலை செய்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சி கரியாம்பட்டியை சேர்ந்தவர் ஆச்சிமுத்து(78). விவசாயி. இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

தற்போது 3-வது மகன் காட்டுராஜா என்பவர் அவரது மகளுக்கு திருமணம் வைத்துள்ளார். அந்த திருமண அழைப்பிதழில் முதல் மகன் பெயர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் நேற்று இரவு ஆச்சிமுத்துவின் பேரனான மருதை(27) என்பவர் எனது தந்தை மற்றும் தாய் பெயர் அழைப்பிதழில் ஏன் இடம்பெறவில்லை என கேட்டுள்ளார்.

அதற்கு ஆச்சிமுத்து அதுபற்றி தனக்கு எப்படி தெரியும். நீ உன் சித்தப்பாவிடமே கேட்டு தெரிந்து கொள் என கூறியுள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மருதை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாத்தா ஆச்சிமுத்துவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த ரத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே ஆச்சிமுத்து உயிரிழந்தார். இதை பார்த்ததும் மருதை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட ஆச்சிமுத்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய மருதையை தேடி வருகின்றனர். மெக்கானிக் வேலை பார்த்து வரும் மருதைக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்