< Back
மாநில செய்திகள்
குளிர்ப்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து தாத்தா, பாட்டியை கொலை செய்த பேரன்...!
மாநில செய்திகள்

குளிர்ப்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து தாத்தா, பாட்டியை கொலை செய்த பேரன்...!

தினத்தந்தி
|
18 April 2023 3:29 PM IST

குளிர்ப்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து தாத்தா, பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் அருகிலுள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலுவு (எ) ஆறுமுகம் - மணி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

மூத்த மகன் முருகன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள காடாம்புலியூர் பகுதியில் வசித்து வருகிறார் முருகமின் மகன் அருள்சக்தி (19). நேற்று மாலை பில்லூர் கிராமத்திற்கு தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக் கூறப்படுகிறது. மேலும் போகும் போது உணவு மற்றும் குளிர்பானம் வாங்கி சென்றுள்ளார்.

குளிர்பானத்தில் விஷம் கலந்த அருள்சக்தி வலுகட்டாயமாக தாத்தா ஆறுமுகம் மற்றும் பாட்டி மணி இருவருக்கும் கொடுத்து குடிக்க வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து அருள்சக்தி தப்பி ஓடி விட்டார்.

வீட்டிற்கு சென்ற அருள்சக்தி போதையில் தன் தந்தையிடம் உன் அப்பாவையும், அம்மாவையும் கொலை செய்துவிட்டேன் உன்னையும் கொலை செய்துவிடுவேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் உடனடியாக பில்லூரில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆறுமுகம் அவரது மனைவி மணி இருவரும் உயிரிழந்து சடலமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள விழுப்புரம் தாலுக்கா போலீசார் தப்பியோடிய அருள்சக்தியை தேடி வருகின்றனர். பேரனே தாத்தா, பாட்டியை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்