< Back
மாநில செய்திகள்
கள்ளத்தொடர்பை கண்டித்த தாத்தா: சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துகொடுத்து கொன்ற பேரன்
மாநில செய்திகள்

கள்ளத்தொடர்பை கண்டித்த தாத்தா: சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துகொடுத்து கொன்ற பேரன்

தினத்தந்தி
|
3 May 2024 7:44 AM IST

கள்ளத்தொடர்பை கண்டித்த தாத்தாவை பேரனே சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துகொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் தேவராயபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (வயது 20). இவர் கடந்த 30ம் தேதி நாமக்கல் பஸ் நிலையம் எதிரே உள்ள ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி சென்றுள்ளார்.

வீட்டில் தனது தாயார் நதியா (40), தாத்தா சண்முகம் (வயது 67) உள்பட குடும்பத்தினருக்கு சிக்கன் ரைசை கொடுத்துள்ளார். அதை வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்ட நிலையில் நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இருவரும் சாப்பிட்ட சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை சேகரித்து போலீசார் சேலத்தில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) கலந்திருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிக்கன் ரைஸ் வாங்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம், சிக்கன் ரைசை வாங்கி வந்த பகவதி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) கலந்துகொடுத்ததை பகவதி ஒப்புக்கொண்டார்.

கல்லூரி மாணவனான பகவதிக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை தாத்தா சண்முகம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேரன் பகவதி சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து தாத்தா சண்முகத்தை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பகவதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்