சிவகங்கை
மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும்
|இன்றைய இளம்மாணவர்கள் தற்போது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்த காரைக்குடி மாணவரை முன்னுதாரணமாக கொண்டு பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.
காரைக்குடி,
இன்றைய இளம்மாணவர்கள் தற்போது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்த காரைக்குடி மாணவரை முன்னுதாரணமாக கொண்டு பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.
பாராட்டு விழா
காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் பிரனேஷ் (வயது 15). இவர் சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டராகவும், தமிழகத்தில் 28-வது கிராண்ட் மாஸ்டராகவும் பட்டம் பெற்று சாதனை படைத்தார். இதையொட்டி மாணவர் பிரனேஷ்க்கு பாராட்டு விழா வித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் முத்துதுரை வாழ்த்துரை வழங்கினார். பள்ளி தமிழாசிரியர் செயம்கொண்டான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மாணவர் பிரனேசை பாராட்டி பேசியதாவது:- மாணவர் பிரனேஷ் சதுரங்க போட்டியில் சாதித்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். சிறுவயது முதல் சதுரங்க விளையாட்டில் சிறப்பான பயிற்சிகள் பெற்று கடந்த 2020-ம் ஆண்டில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று 2400 புள்ளிகளை பெற்றார். தற்போது ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ரில்டன் கோப்பை சதுரங்க போட்டியில் பங்கேற்று 2500 புள்ளிகளை பெற்று கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும்
வரும் காலங்களில் 2600 புள்ளிகளை பெற்று விரைவில் சூப்பர் கிராண்ட் மாஸ்டராக திகழ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவரது திறமையையும், ஆர்வத்தையும் வெளிக்கொண்டுவர அடிப்படையாக இருந்த சதுரங்க கழக அமைப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். இளைய தலைமுறையினர்கள் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷை போல் தங்களது தனித்திறன்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தி பெருமை சேர்த்தார். மேலும் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுத்துறையில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறார். இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வரலாற்று பக்கங்களில் இடம்பெற்ற கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ் வருங்காலத்தில் பல வெற்றிகளை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பரிசு
தொடர்ந்து மாணவர் பிரனேசிற்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் ரொக்க பரிசுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். விழாவில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் விஜயசரவணன், மாவட்ட மேல்நிலைப்பள்ளிகள் கல்வி அலுவலர் சண்முகநாதன், மாவட்ட சதுரங்க கழக தலைவர் கருப்பையா, செயலர் கண்ணன் உள்பட மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் பிரமுகர்கள், நகர் மன்ற கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்தகொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் ஹேமமாலினிசுவாமிநாதன் நன்றி கூறினார்.