திருச்சியில் அக்டோபர் முதல் வாரத்தில் மாபெரும் மாநாடு - வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
|‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற பெயரில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வி.கே.சசிகலா மற்றும் பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், 'வெல்லும் ஜனநாயகம்' என்ற பெயரில் திருச்சியில் அக்டோபர் முதல் வாரத்தில் மாபெரும் மாநாடு நடைபெறும் என்று தெரிவித்தார். இந்த மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் தலைமையில் தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள், தேசிய தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.