அரியலூர்
ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றத்தால் குளறுபடி: உதயநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை
|ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் உதயநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கிராமசபை கூட்டம்
தொழிலாளர் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள 200 கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர். துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சுள்ளங்குடி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி கலந்து கொண்டார். மேலும் கிராம சபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆணையரிடம் இருந்து வரப்பெற்ற கூட்ட பொருட்கள் மற்றும் இதர கூட்ட பொருட்கள் விவாதிக்கப்பட்டன.
உதயநத்தம் ஊராட்சி
தா.பழுரில் உள்ள உதயநத்தம் ஊராட்சியில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். ஆனால் ஊராட்சி செயலாளர் இளங்கோவன் கூட்டத்திற்கு வரவில்லை. இளங்கோவன் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த நிலையில் உதயநத்தம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு உதயநத்தம் ஊராட்சியின் ஊராட்சி செயலாளர் பொறுப்பில் இருந்து இளங்கோவன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சோழமாதேவி ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கத்திற்கு உதயநத்தம் ஊராட்சி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருந்தது.
இந்த பணி மாறுதலுக்கான ஆணை இளங்கோவனுக்கு கிடைக்கப்பெற்று உதயநத்தம் ஊராட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அமிர்தலிங்கத்திற்கு உரிய பணி ஆணை கிடைக்காததால் அவர் உதயநத்தம் ஊராட்சியின் ஊராட்சி செயலாளராக பொறுப்பேற்கவில்லை. இந்தநிலையில் பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் வருகைக்காக தொடர்ந்து காத்திருந்தனர். இந்த தகவல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினருக்கு போலீசார் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமா?
இதனைத் தொடர்ந்து உதயநத்தம் ஊராட்சிக்கு புதிதாக பொறுப்பு வழங்கப்பட்ட ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கத்தை உதயநத்தம் ஊராட்சிக்கு சென்று கிராம சபை கூட்டத்தை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி அமிர்தலிங்கம் உதயநத்தம் ஊராட்சிக்கு கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு வந்தார். அங்கிருந்த மக்கள் அமிர்தலிங்கத்தை பார்த்து நீங்கள் முழுமையாக ஊராட்சி செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டு விட்டீர்களா? ஊராட்சியில் நடைபெறும் அனைத்து விவரங்களும் உங்களுக்கு சரியாக தெரியுமா? ஊராட்சி நிர்வாகம் சார்பாக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா? என்று கேட்டனர்.
அதற்கு அமிர்தலிங்கம் தனக்கு தற்போது தான் இமெயில் மூலம் உதயநத்தம் ஊராட்சிக்கு ஊராட்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கான ஆணை கிடைத்துள்ளது. இப்பொழுதுதான் உதயநத்தம் ஊராட்சி செயலாளராக நான் பணி ஏற்க இருக்கிறேன் என்று தெரிவித்தார். அதற்கு அங்கு இருந்த மக்கள் நீங்கள் ஊராட்சியில் பொறுப்பு ஏற்ற பிறகு முழுமையாக அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு அதன்பின்னர் கிராம சபை கூட்டங்களை நடத்துங்கள். அதுவரை நீங்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று தெரிவித்தனர்.
வாக்குவாதம்
இதையடுத்து, ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பொதுமக்கள் நீண்ட நேரம் ஆகியும் கிராமசபை கூட்டம் நடத்தாததற்கு கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் ஒன்றிய நிர்வாகத்தில் இருந்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மனுக்கள் ஏதேனும் எடுத்து வந்திருந்தால் அவர்களிடம் அதனை மட்டும் பெற்றுக் கொண்டு பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கும் படி ஊராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி மக்கள் கொண்டு வந்திருந்த 22 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதனை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறி அனுப்பி வைத்தனர்.