< Back
மாநில செய்திகள்
தடியமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சிவகங்கை
மாநில செய்திகள்

தடியமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தினத்தந்தி
|
2 May 2023 12:15 AM IST

தடியமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டார்.

சிவகங்கை

தடியமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டார்.

கிராமசபை கூட்டம்

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், தடியமங்கலம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம், தடியமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர்.நாகஜோதி தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசிரவிக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு, பேசியதாவது:- மாவட்டத்தில் 445 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றன.

கிராமசபை கூட்டங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும், அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்குவதற்கும் பயனாளி பட்டியல் தேர்வு செய்வதற்கும் அடிப்படையாக இருந்து வருகின்றன. கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் என்பது நிலையான ஒன்றாக இருக்கும். மேலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலையில், கிராம வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தேர்வு செய்து செயலாற்றப்படுவதும் இதன் நோக்கமாகும்.

பல்வேறு திட்டப்பணிகள்

மக்களுடன் இணைந்து இணக்கமான முறையில் பணியாற்றி, கிராமத்தின் வளர்ச்சிக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றுவது ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவரின் கடமையாகும். இக்கிராமத்தை பொறுத்த வரையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.68 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றிடும் பொருட்டு, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் போர்வெல்கள் அமைத்துத்தரும் பணிகளும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் நம்ம ஊர் சூப்பரு என்ற திட்டத்தின் மூலம் 48 நாட்கள் தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மை குறித்து பல்வேறு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

சுகாதாரமான கிராமம்

குறிப்பாக, பிளாஸ்டிக் பயன்பாடற்ற ஊராட்சியாக மாற்றுவதற்கு அனைவரும் உறுதுணையாக இருந்து, தங்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து, சுகாதாரமான கிராமத்தை உருவாக்க அனைவரின் பங்கு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதன் பின்னர், நம்ம ஊர் சூப்பரு விழிப்புணர்வு வாகனத்தினை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியாண்டி, மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்