< Back
மாநில செய்திகள்
பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம்
மாநில செய்திகள்

பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம்

தினத்தந்தி
|
13 Sept 2023 5:31 AM IST

பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம் சென்னையில் 2-வது நாளாக நடந்தது.

சென்னை,

கொடைக்கானலை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு சென்னை மற்றும் மதுரையில் கிளைகள் இருக்கின்றன. இதில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வளாகத்தில் எம்.காம்., ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு கடந்த 2019-20-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்ந்துள்ளனர். 3 ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக படித்து 5 ஆண்டுகளை முடிப்பவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்கள் சேர்த்து கொடுக்கப்படும் என்று தெரிவித்து சேர்க்கையை நடத்தியதாக மாணவிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுகள் முடித்த மாணவிகளுக்கு அதுபோல் பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படாமல், 5 ஆண்டுகளையும் முடித்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துவிட்டதாகக் கூறி மாணவிகள் நேற்று முன்தினம் போராட்டத்தை கையில் எடுத்தனர். 2-வது நாளாக நேற்றும் அவர்கள் இந்தப்போராட்டத்தை தொடர்ந்தனர்.

2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசார், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் அவகாசம் கேட்டதாகவும், அதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு இருப்பதாகவும் மாணவிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மாணவிகள் ஸ்ரீவித்யா, ஜோதி இன்பராணி, தீபிகா கூறுகையில், 'பல்கலைக்கழக நிர்வாகம் வருகிற வெள்ளிக்கிழமை வரை அவகாசம் கேட்டிருக்கிறது. அதற்குள் எங்களுக்கு தீர்வு சொல்லவில்லை என்றால், அடுத்தக்கட்டமாக சாலை மறியலில் ஈடுபடவும் தயாராக உள்ளோம்' என்றனர். மாணவிகள் தங்கள் கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறைக்கும், கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் செய்திகள்