சென்னை
கருமுட்டையை விற்க மறுத்த பட்டதாரி பெண் சித்ரவதை: ரவுடி-மனைவி கைது
|கருமுட்டையை விற்க மறுத்த பட்டதாரி பெண்ணை சித்ரவதை செய்த ரவுடி மற்றும் அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 4-வது பிளாக்கில் வசித்து வருபவர் விஜய். பிரபல ரவுடியான இவருடைய மனைவி சுருதி (வயது 22). பி.ஏ. பட்டதாரியான இவருக்கும், விஜய்க்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஜய், தனது மனைவியை அடித்து துன்புறுத்தினார். இதில் பலத்த காயமடைந்த சுருதி, எண்ணூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி விஜயை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதன்பிறகு கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காத சுருதி, திருவொற்றியூர் என்.டி.ஓ. குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் 118-வது பிளாக்கில் வசிக்கும் தனது தோழி ஐஸ்வர்யா (22) என்பவரது வீட்டில் தனது குழந்தையுடன் அடைக்கலம் புகுந்தார். ஐஸ்வர்யாவின் கணவர் பெயர் சூரஜ் ஜெனிஸ் கண்ணா(25). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில் சூரத் ஜெனிஸ் கண்ணாவும், அவருடைய மனைவி ஐஸ்வர்யாவும் சேர்ந்து தங்களிடம் அடைக்கலம் தேடி வந்த சுருதியின் கருமுட்டையை எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய திட்டமிட்டனர். இதற்காக பெண் தரகர் ஒருவர் மூலமாக தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து சுருதியின் கருமுட்டையை எடுக்க முடிவு செய்யப்பட்டது. பெண் தரகர் ஆலோசனையின்பேரில் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சுருதியை கட்டாயப்படுத்தி தாம்பரம் அனுப்பி வைத்தனர். இதற்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் கொடுப்பதாக கூறினர். ஆனால் ஆஸ்பத்திரியில் சென்று விசாரித்த போது கருமுட்டை பெற ரூ.50 ஆயிரம் வரை கொடுப்பதாக தெரிவித்தனர்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பயந்து போன சுருதி, இது பற்றி பிரிந்துபோன தனது கணவர் விஜயிடம் போனில் தெரிவித்தார். அவர், "நீ வீட்டுக்கு வா பார்த்து கொள்ளலாம்" என்றார்.
இதையடுத்து தன்னை ஏமாற்றிய தோழி ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு சென்று சொல்லிவிட்டு வருகிறேன் என்று கூறிய சுருதி, தோழி ஐஸ்வர்யா வீட்டுக்கு சென்றார். அங்கு கருமுட்டை கொடுக்காமல் திரும்பி வந்ததால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யாவும், அவருடைய கணவர் சூரஜ் ஜெனிஸ் கண்ணாவும் சேர்ந்து கத்தியின் பின்புறத்தால் சுருதியை சரமாரியாக தாக்கியதுடன், அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.
அங்கிருந்து தப்பிய சுருதி, இதுபற்றி திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காதர் வழக்குப்பதிவு செய்து கருமுட்டையை விற்க மறுத்த பட்டதாரி பெண்ணை சித்ரவதை செய்த ரவுடி சூரஜ் ஜெனிஸ் கண்ணா, அவருடைய மனைவி ஐஸ்வர்யா ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் கருமுட்டை விற்பனை தொடர்பாக தாம்பரம் தனியார் ஆஸ்பத்திரியில் நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். பெண் தரகர் யார்? என்பதை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் தனியார் ஆஸ்பத்திரி விசாரணை வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.