தஞ்சாவூர்
திருமணமானவருடன் ஓடிய பட்டதாரி பெண் தூக்கில் பிணம்
|திருமணமானவருடன் ஓடிய பட்டதாரி பெண் தூக்கில் பிணம்
தஞ்சையில் ஏற்கனவே திருமணமானவருடன் வீட்டை விட்டு ஓடிய பட்டதாரி பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டதாரி பெண்
தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் பாரின்ராஜா(வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மூத்த மகள் சுபாஸ்ரீ(19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம். படித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தஞ்சை நாஞ்சிக்கோட்டை சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தூக்கில் பிணம்
உடனே வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் லியோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் ஒர்க்ஷாப்பின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் துப்பட்டாவால் சுபாஸ்ரீ தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தூக்கில் பிணமாக தொங்கிய சுபாஸ்ரீ உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசில் புகார்
இது தொடர்பாக தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் பாரின்ராஜா புகார் அளித்தார். அதில் எனது மூத்த மகளுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. எனது மகளிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவர் பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் எனது மகள் அவருடன் சென்று விட்டார். அதனால் நானும் எனது குடும்பத்தினரும் எனது மூத்த மகளுடன் பேசுவதில்லை.
அடித்து துன்புறுத்தி சித்ரவதை
எனது மகளை இரண்டாம் தாரமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் எனது மகளை அடித்து துன்புறுத்தியும், சித்திரவதை செய்தும் வந்துள்ளனர். எனது மகள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணை
இதையடுத்து சுபாஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுபாஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா?, கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.