< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

படிப்படியாக குறைந்து வரும் தக்காளி விலை

தினத்தந்தி
|
7 Aug 2023 7:45 PM GMT

வரத்து அதிகரிக்க தொடங்கியதால் படிப்படியாக தக்காளி விலை குறைந்து வருகிறது. 1 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.


வரத்து அதிகரிக்க தொடங்கியதால் படிப்படியாக தக்காளி விலை குறைந்து வருகிறது. 1 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காய்கறி மார்க்கெட்

தஞ்சை அரண்மனை வளாகம் அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் விற்பனைக்காக எடுத்துச்செல்வது வழக்கம். தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நிலக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும்.

தக்காளி விலை குறைந்தது

சில காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்ததால் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. வரத்து குறைவால் பீன்ஸ் மற்றும் அவரைக்காய் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. அதன்படி கடந்த சில வாரங்களாக மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கு விற்பனை ஆனது. சில்லறை கடைகளில் ரூ.110 வரை விற்கப்பட்டது. அதேபோல் அவரைக்காயும் ஒரு கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் கடந்த வாரத்தை காட்டிலும், இந்த வாரம் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் ரூ.10 முதல் ரூ.20 வரை குறைந்துள்ளது.

1 கிலோ ரூ.150-க்கு விற்ற தக்காளி நேற்று விலை குறைந்து தரம் வாரியாக ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் கிலோரூ.130-க்கும் விற்ற சின்னவெங்காயம் விலை குறைந்து கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 2 மாதங்களாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 1 கிலோ பீன்ஸ் ரூ.100-க்கும், அவரைக்காய் ரூ.80 முதல் ரூ.90 வரையும் விற்பனையாகிறது.

இல்லத்தரசிகள் நிம்மதி

மேலும் பல்வேறு காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. 1 கிலோ ரூ.70-க்கு விற்ற கேரட் ரூ.60-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், உருளைகிழங்கு ரூ.35-க்கும் விற்பனையானது. காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது விலை குறைந்து வருகிறது. இதனால் மேலும் விலை குறையும் என்ற நம்பிக்கையில் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்கறி விலை உயர்ந்து காணப்பட்டது. சாம்பார் உள்ளிட்டவற்றிற்கு தக்காளி, வெங்காயம் ஆகியவை அவசியம் என்பதால் விலை உயர்வால் குறைந்த அளவு பயன்படுத்தினோம். தற்போது விலையானது சற்று குறைந்துள்ளது நிம்மதியை ஏற்படுத்துகிறது.தொடர்ந்து விலை குறைந்து வந்தால் தக்காளி, சின்ன வெங்காயம் வழக்கம் போல் சாம்பாரில் இடம் பெறும். அதே போல் விதவிதமான தக்காளி சார்ந்த உணவுகளையும் தயார் செய்யலாம் என்றனர்.

வரத்து அதிகரிப்பு

காய்கறி வியாபாரிகள் கூறுகையில், வடமாநிலங்களில் தொடர் மழையால் காய்கறி உற்பத்தி பாதித்தது. மேலும் கோடைகாலத்தில் அடித்த வெயிலும் இதற்கு மற்றொரு காரணமாகும். காய்கறி உற்பத்தி பாதித்ததாலே வரத்து குறைந்து அதன் விலை அதிகரிக்கும். ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலை உயர்ந்திருந்தது. தற்போது மழையால் உற்பத்தி பாதிப்பால் விலை அதிகரித்த நிலையில் மீண்டும் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்திருப்பது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்