சேலம்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க அரசு துரித நடவடிக்கை-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
|கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக சேலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பேட்டி
சேலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊட்டி, வால்பாறை உள்பட பல்வேறு மலைப்பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் அங்கு நேரடியாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்காட்டில் ஆய்வு செய்து பழுதடைந்த நிலையில் உள்ள 3 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களுக்கு பதிலாக மிக விரைவில் புதிய கட்டிடங்களை கட்டவும், அதுவரை அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாற்று ஏற்பாடாக அருகில் உள்ள பள்ளிகளில் படிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ரூ.1,300 கோடி நிதி
தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 31 பள்ளிகளில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அதற்கான மாற்று ஏற்பாடாக புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு 5 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.7 ஆயிரம் கோடியில் 18 ஆயிரம் வகுப்பறைகள் மற்றும் தேவையான கழிப்பறைகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உடல்நலம் மற்றும் மனரீதியான ஆலோசனைகளை வழங்க 413 கல்வி வட்டாரங்களுக்கு தலா 2 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த டாக்டர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைகளை வழங்குவர்.
துரித நடவடிக்கை
மாணவ, மாணவிகளுக்கு பள்ளி விடுமுறை மிகவும் அவசியமானது. அப்போது தான் அவர்கள் மன அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். இதனால் தனியார் பள்ளி நிர்வாகம் விடுமுறை நாட்களில் மாணவ, மாணவிகளை அழைத்து வகுப்புகள் நடத்தக்கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேறு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். அதாவது, மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. மாற்று பள்ளியில் படிக்க இதுவரை 907 பேர் விண்ணப்பம் வழங்கியுள்ளனர். அதை ஆய்வு செய்ய தனியாக ஒரு மாவட்ட கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.