< Back
மாநில செய்திகள்
பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
30 Jun 2024 11:20 AM IST

தனியார் பால் நிறுவனங்களின் கொள்ளையை அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் பெருமளவில் குறைத்துள்ளன. பால் விலைக் குறைப்பு மட்டுமின்றி, பாலின் தரத்தையும் குறைத்துக் காட்டி குறைந்த விலைக்கு வாங்கி உழவர்களை ஏமாற்றுகின்றன. உழவர்களை சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களின் மோசடிகளை அரசு கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 2.05 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், மிகக்குறைந்த அளவு அதாவது 30 லட்சம் லிட்டர் பாலை மட்டும்தான் தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள 1.75 கோடி லிட்டர் பாலை தனியார் நிறுவனங்கள் தான் கொள்முதல் செய்கின்றன.

ஆவின் நிறுவனம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே பால் கொள்முதல் அளவை அதிகரிக்கவில்லை. அதனால், உழவர்கள் தங்களின் பாலை விற்பனை செய்வதற்கு தனியார் பால் நிறுவனங்களையே நம்பிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பால் நிறுவனங்கள் எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு உழவர்களை சுரண்டி வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆவின் பால் நிறுவனம் ஒரு லிட்டர் பசும்பாலை ரூ.38-க்கும், எருமைப்பாலை ரூ.47-க்கும் கொள்முதல் செய்கிறது. பெரும்பான்மையான தனியார் நிறுவனங்களும் கிட்டத்தட்ட இதே விலைக்கு பாலை கொள்முதல் செய்து வந்தன. ஆனால், கடந்த சில வாரங்களாக தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை கணிசமாக குறைத்து விட்டன. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பசும்பாலை அதிகபட்சமாக ரூ.29-க்கு மட்டும் தான் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.

இது ஆவின் நிறுவனம் வழங்கும் கொள்முதல் விலையை விட லிட்டருக்கு ரூ.10 குறைவு ஆகும். அதுமட்டுமின்றி, பால் கொள்முதல் செய்யப்படும் அளவையும் தனியார் பால் நிறுவனங்கள் வெகுவாக குறைத்துவிட்டன. தனியார் நிறுவனங்கள் பாலுக்கான கொள்முதல் விலையை குறைத்து விட்டதால், உழவர்களுக்கு தினமும் ரூ.100 முதல் ரூ.500 வரை இழப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, பால் கொள்முதல் அளவு குறைந்து விட்டதால், பல உழவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பாலை விற்பனை செய்ய முடியாமல் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். இதனால் உழவர்களுக்கு மிக அதிக இழப்பு ஏற்படும்.

தனியார் நிறுவனங்களின் இந்த மோசடியை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். தனியார் பால் நிறுவனங்களின் இந்த கொள்ளையை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அவ்வாறு வேடிக்கை பார்ப்பது உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாக அமைந்து விடும். தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பேருருவம் எடுத்துள்ளன. இது அரசின் தோல்வியையே காட்டுகிறது.

இந்த நிலையை மாற்றி, தனியார் பால் நிறுவனங்களின் சுரண்டலைத் தடுக்கவும், உழவர்கள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளைக் காக்கவும் வசதியாக தமிழ்நாட்டில் பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும். அந்த ஆணையம் நிர்ணயிக்கும் கொள்முதல் விலைக்கு உழவர்களிடம் பால் கொள்முதல் செய்யப்படுவதும், விற்பனை விலைக்கு பொதுமக்களுக்கு சந்தையில் பால் விற்பனை செய்யப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்