< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்:  சீமான் பேச்சு
கரூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்: சீமான் பேச்சு

தினத்தந்தி
|
28 Aug 2023 11:34 PM IST

அரசு பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என கரூர் பொதுக்கூட்டத்தில் சீமான் கூறினார்.

பொதுக்கூட்டம்

கரூர் காந்திகிராமத்தில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சி சார்பில் கல்வி மானுட உரிமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகத்தில் கல்வியில் முதல்நாடு தென்கொரியா. 8 வயதில் குழந்தைகளை 1-ம் வகுப்பில் சேர்க்கிறார்கள். ஆனால் நம்நாட்டில் 8 வயதில் பொதுத்தேர்வு எழுத கல்வி கொள்கை கொண்டு வரப்படுகிறது.

தமிழ் பேரினம்

நீட்டில் தோற்று விடுவோம் என்றும், பிளஸ்-2-வில் தோற்றாலும் குழந்தைகள் இறக்கின்றன. 8 வயதில் பொதுத்தேர்வு எழுத சொல்கிறார்கள். கல்வி அறிஞர்கள் இது நம் குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என்கிறார்கள். இதை மறைமுகமாக தி.மு.க. ஆட்சி செயல்படுத்துகிறது. உலகத்திற்கு அறிவியல், ஞானம், வேளாண்மை, இலக்கியம் என அனைத்தையும் கற்று கொடுத்தது தமிழ் பேரினம். கல்வி முறையை நாம் மாற்ற வேண்டி இருக்கிறது.

அரசு பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டி இருக்கிறது. டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் வந்ததற்கு காரணம் கல்வியின் தரத்தை உயர்த்தியதுதான். டெல்லியில் பள்ளிகள் நட்சத்திர விடுதிகள் போன்று இருக்கிறது.

தனித்து போட்டி

ஆனால் இங்கு மேற்கூரை இல்லை, கழிவறை இல்லை. ஆனால் சீமான் ஆட்சிக்கு வந்தால் பசுஞ்சோலை பள்ளிகள், விளையாட்டு திடல் என அனைத்தும் இருக்கும். ரேஷன் கடையில் கருப்பட்டி, பனங்கற்கண்டு, கரும்பு வெல்லம் ஆகியவற்றை விற்பனை செய்வோம். தமிழ் மொழியில் இல்லாத வளமை உலகத்தில் எந்த மொழியிலும் இல்லை. ஆங்கிலம் என்பது அறிவு இல்லை, மொழி. உலகத்தின் மூத்த மொழி தமிழ்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடமுறை இருக்கிறது. ஆனால் சமச்சீரான கல்வி முறை இல்லை. வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தனித்துதான் போட்டியிடுவோம். சென்ற முறை கரூரில் டாக்டர் கருப்பையாவை வேட்பாளராக நிறுத்தினேன். இந்தமுறையும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பேன். நீங்கள் அவரை வெற்றிபெற செய்வீர்கள் என நம்புகிறேன். கல்வி என்பது மானுட உரிமை. அறிவின் தேடல். தொட்டு பார்த்தால் காகிதம் தொடர்ந்து படித்தால் அது ஆயுதம்.

இவ்வாறு அவா் கூறினார்.

மேலும் செய்திகள்