கூவம், அடையாறு சீரமைப்பு திட்ட பணிகள் குறித்து அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
|கூவம், அடையாறு சீரமைப்பு திட்ட பணிகள் குறித்து அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் ஓடும் கூவம் மற்றும் அடையாற்றை சீரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அத்திட்டத்திற்காக இதுவரை ரூ.790 கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 54 சதவீதத்திற்கும் கூடுதலான நிதி செலவிடப்பட்டு விட்ட நிலையில், அதற்கு இணையான முன்னேற்றம் கண்களுக்கு தென்படவில்லை.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கூவம், அடையாறு சீரமைப்பு என்பது தேர்தல் காலத்து பேசு பொருளாக இருக்கிறதே தவிர, அதை செயல்படுத்தும் துணிச்சல் எந்த அரசுக்கும் இதுவரை வரவில்லை. அடையாறு மற்றும் கூவத்தை சீரமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகையை ஆற்றில் கொட்டியதாக நினைத்து கடந்து போய்விட முடியாது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
எனவே, சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தில் இதுவரை என்னென்ன பணிகள் நடைபெற்றுள்ளன? அனைத்து பணிகளும் எப்போது முடியும்? கூவம் மற்றும் அடையாற்றின் கரைகளில் மக்கள் காற்று வாங்கியபடி பொழுதுபோக்குவது எப்போது? என்பன போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் வெள்ளையறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.