< Back
மாநில செய்திகள்
கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
10 Aug 2023 3:28 PM IST

கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்று கோரியவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 27 மாதங்கள் கடந்துள்ள நிலையில், யாருக்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படவில்லை. வாக்குறுதிக்கு முரணாக நடப்பதுதான் தி.மு.க.வின் வாடிக்கை என்ற அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படவில்லை என்றாலும், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பினையாவது தி.மு.க. அரசு வழங்கியிருக்க வேண்டும். அதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று கூறப்படுகிறது. ஓர் அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், அந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது.

அப்படி இருக்கையில், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், தங்கள் உயிரை துச்சமென மதித்து, பொதுமக்களுக்காக சேவை புரிந்து, அதன் காரணமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது, மறுக்கப்படுகிறது என்பது மிகுந்த மன வேதனை அளிக்கும் செயலாகும்.

'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கேற்ப ஓர் உதாரணத்தை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார். அந்தப் பணி இதுநாள் வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் பொறியியல் அடிப்படையிலான பணியை அவர் கோருகிறார் என்று சாக்குபோக்கு சொல்லப்படுகிறது. பொறியியல் படிப்பு படித்தவர் பொறியாளர் பணியைக் கோருவதில் நியாயமிருக்கிறது.

அரசின் பல்வேறு துறைகளில் நூற்றுக்கணக்கான பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்ற நிலையில், உயிரைப் பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததன் காரணமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு பொறியாளர் பணியை கொடுப்பதில் ஏன் தாமதம்? விதி என்பது மக்களுக்காக வகுக்கப்பட்டதுதான். அந்த விதி மக்களுக்கு பாதகமாக இருந்தால், அந்த விதியில் திருத்தத்தைக் கொண்டுவந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியது அரசாங்கத்தின் கடமை. குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்காக விதியை திருத்தம் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது. இந்தக் கடமையைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. தி.மு.க.வின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது கொரோனா தொற்றுத் தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்குவது குறித்து நல்ல அறிவிப்பினை வரும் சுதந்திர தினத்தன்று வெளியிடவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்