தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் - திருமாவளவன்
|சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு அரசே ரூ.10 லட்சம் தருவது ஏற்புடையது அல்ல என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை,
வி.சி.க. தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
2024 அக்டோபர் 2 ஆம் நாள் நடக்கவிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியான 'மகளிர் விடுதலை இயக்கத்தின்' மாநாடு மது - போதைப் பொருட்கள் ஒழிப்பை மையமாகக்கொண்டு நடத்தப்பட உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்டகாலமாகவே இதை வலியுறுத்தி வருகிறது.
குடிப்பதை நாம் ஒழுக்கப் பிரச்சனையாக மட்டும் பார்க்கவில்லை. குடிப்பவர்கள் கெட்டவர்கள் குடிக்காதவர்கள் நல்லவர்கள் என்று இந்தப் பிரச்சனையை எளிமைப்படுத்தவில்லை. குடி முதன்மையாக ஒரு பொருளாதாரப் பிரச்சனையாகும். ஏழை மக்கள் உழைத்து சம்பாதிக்கும் பணம் அவர்களிடம் மிச்சம் மீதி ஏதுமில்லாமல் மதுப் பழக்கத்தால் உறிஞ்சப்படுகிறது. கிராமங்களில்தான் அதிகம் விதவைகள் இருக்கிறார்கள், பெண்கள் குடும்பத் தலைவர்களாக இருக்கும் குடும்பங்கள் கிராமங்களில் அதிகம். அதற்கு முக்கியமான காரணம் குடிதான். கிராமப் புறங்களில் ஆண்கள் குடித்தே குறை வயதில் செத்துப்போகிறார்கள். இந்தத் தீமையை உணர்ந்ததால்தான் புரட்சியாளர் அம்பேத்கர், காந்தியடிகள் முதல் ஐயா எல்.இளையபெருமாள் வரை அனைத்துத் தலைவர்களும் மதுவிலக்கை வலியுறுத்தினார்கள்.
நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவரவேண்டும் என்றுதான் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 47 அதைத்தான் வலியுறுத்துகிறது.
சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு அரசே ரூ.10 லட்சம் தருவது ஏற்புடையது அல்ல. அரசே மதுபானக்கடை நடத்தி குடிப்பழக்கத்திற்கு பழக்கப்படுத்தி அதுவே பாழாக்கி வருகிறது. இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.