விழுப்புரம்
காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க அரசு அனுமதியளிக்க வேண்டும் :குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
|விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. ஆகவே நோயை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசியை தயார்படுத்தி கால்நடைகளுக்கு விரைவாக செலுத்த வேண்டும். எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு புதியதாக கட்ட 2 ஆண்டுகள் ஆகும். அதுவரை விவசாயிகளுக்கு தற்காலிக தீர்வு வேண்டும். அணைக்கட்டுக்கு தண்ணீர் வந்து வீணாக கடலுக்கு செல்வதை தடுத்து புதிய வாய்க்கால் ஏற்படுத்தி அதன் மூலம் மரகதபுரம், ஆழாங்கால், பானாம்பட்டு வாய்க்காலில் தண்ணீரை திருப்பி விட வேண்டும். ஏரிகளில் கருவேல மரங்கள், சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. அந்த மரங்களை ஏலம்விட்டு உடனே அகற்ற வேண்டும்.
கரும்பு நிலுவைத்தொகை
முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகையை விரைந்து பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பணப்பட்டுவாடா செய்ய 20 முதல் 25 நாட்கள் வரை ஆகிறது. உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
கார்த்திகை பட்டத்தில் உளுந்து, மணிலா விதைகளை போதிய அளவில் இருப்பு வைத்து வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி, விஷக்கடிக்கான மருந்துகளை போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். உழவர் அட்டை கேட்டு விண்ணப்பித்த பலருக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. அவற்றை விரைந்து வழங்க வேண்டும்.
போலி மருந்துகள் விற்பனை
சாலாமேடு, மருதூர் ஏரிகளில் ஓட்டல் கழிவுகளை கலக்க விட்டு ஏரியையே வீணாக்கி விட்டனர். இந்த விஷயத்தில் நகராட்சியும், பொதுப்பணித்துறையும் கண்டுகொள்ளவில்லை. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மானியத்தில் மாட்டு கொட்டகை அமைத்து தரப்படும் என்றார்கள், எங்கேயும் கட்டித்தரப்படவில்லை. கிசான் கார்டு பெற ஜாமீன் கேட்பதால் எல்லா விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை அடமான கடன் பெற ஜாமீன் கேட்கக்கூடாது என்று அரசு சொல்கிறது. ஆனால் அதிகாரிகள், ஜாமீன் கேட்கிறார்கள். விவசாய பயன்பாட்டுக்கு காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும் மின்சாரம் வழங்க வேண்டும்.
பூச்சி மருந்து கடைகளில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க அனைத்து கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க வனத்துறை அமைச்சரிடம் அனுமதி பெற வேண்டும். காட்டுப்பன்றிகளால் தினந்தோறும் விவசாய பயிர்கள் அதிகளவில் சேதமடைந்து வருகிறது. இதற்கு நிரந்தர விடிவுகாலம் வேண்டும். அதற்கு காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க அரசாங்கத்துக்கு கடிதம் எழுதும்படி ஒட்டுமொத்த விவசாயிகளும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
நடவடிக்கை
இதற்கு பதிலளித்து கலெக்டர் பழனி கூறுகையில், கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்படும். ஏரிகளில் இருக்கும் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பூச்சி மருந்து கடைகளில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிய ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, தொடர்ந்து கண்காணிக்கப்படும். பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிப்பது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறிய அவர், விவசாயிகளின் கோரிக்கைள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வேளாண் இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் இளஞ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.