< Back
மாநில செய்திகள்
நீண்ட காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

நீண்ட காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
9 Sept 2023 9:32 PM IST

நீண்ட காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

நீண்ட நெடுங்காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

நீண்ட நெடுங்காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தப்பட்டு, அரசியல் நெருக்கடிகளும் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கிறேன்.

மதிப்புமிக்க மானுட வாழ்வில் சிறை என்பது தவறிழைத்தவர்களைத் தண்டித்து, சீர்திருத்தி, புனர்வாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்புதானே அன்றி, அவை வாழ்நாள் முழுமைக்கும் சமூக வாழ்வை மறுத்து வதைக்கும் வதைக்கூடங்கள் அல்ல. அவ்வகையில் சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் இசுலாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனாலேயே, அவர்களுக்கான சனநாயக உரிமையான விடுதலை எனும் வாய்ப்பை மறுப்பதென்பது அப்பட்டமான உரிமை பறிப்பாகும்.

தமிழ்நாட்டுச் சிறைகளில், இசுலாமியச் சிறைவாசிகளை எவ்வித விசாரணையுமின்றி, சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே நீண்ட காலமாக அடைத்து வைத்திருந்தது பெருந்துயரமென்றால், மறுபுறம், சட்டத்தின்படி இருக்கும் தார்மீக வாய்ப்புகளை முற்றாக மறுத்து, 20, 25 ஆண்டுகளென தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழித்து வரும் இசுலாமியத் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய விடாப்பிடியாய் மறுத்து, அவர்களை வதைத்து வரும் ஆளும் திராவிடக்கட்சிகளின் கொடுங்கோல்போக்கு சகித்துக் கொள்ளவே முடியாதப் பெருங்கொடுமையாகும்.

இசுலாமியச் சிறைவாசிகளின் விடுதலைக்கான கோரிக்கைகள் பலமுறை வைக்கப்பட்டும், அதற்குரிய அதிகாரம் திராவிடக்கட்சிகளின் அரசுகளின் வசமிருந்தும் இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலைசெய்ய அவை முன்வரவில்லை என்பது ஈவிரக்கமற்ற கொடுஞ்செயலாகும்.

கடந்த 2008ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுதலை செய்யலாம் எனும் அரசாணை வெளியிடப்பட்டு, மதுரை மாமன்ற உறுப்பினர் லீலாவதியை வெட்டிக்கொன்ற கொடுங்கோலர்களை விடுதலை செய்தபோதும், தா.கிருட்டிணனைக் கொன்ற கொலையாளிகளை எட்டு ஆண்டுகளில் முன்விடுதலை செய்தபோதும் அவ்வுத்தரவு ராஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் இசுலாமியச் சிறைவாசிகளுக்கு மட்டும் பொருந்தாது என்று அரசாணை வெளியிட்டதும் திமுக அரசுதான்.

இந்நிலையில், 'ஆட்சிக்கு வந்ததும், இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலைசெய்வோம்' என வாக்குறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய திமுக அரசும், அதே வழியைக் கடைபிடித்து, இரண்டாண்டுகளாக இசுலாமியச் சிறைவாசிகளின் விடுதலையை மறுத்து வருவதும், விடுதலைக்குச் சட்டரீதியாக முட்டுக்கட்டைப் போடும் விதமான செயல்களில் ஈடுபட்டு வருவதும் வெட்கக்கேடானதாகும்.

கடந்த காலங்களில் கடைபிடித்த அதே பாராமுக அணுகுமுறையைத் திமுக அரசு, தற்போதும் கடைபிடித்து வருவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இசுலாமியர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அவர்களது உயிருக்கும், உரிமைக்கும் துளியும் மதிப்பளிக்காது துச்சமெனக்கருதி அவர்களைத் தூக்கியெறிவது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் அமர வைத்த அம்மக்களுக்குச் செய்யும் படுபாதகச் செயலாகும்.

கடுங்குற்றம் புரிந்து தண்டனை பெற்ற மற்ற சிறைவாசிகளை எல்லாம் 10 ஆண்டுகளில் முன்விடுதலை செய்தபோது, இசுலாமியச் சிறைவாசிகளையும் அதேபோல தண்டனைக்குறைப்பின் கீழ் விடுதலைசெய்யாமல் பாரபட்சம் காட்டியது கொடும் அநீதி என்றால் தற்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் எம்மினச் சொந்தங்களை விடுதலை செய்வதில் திமுக அரசுக்கு அப்படி என்ன தயக்கம்?

சட்டத்தின்படி, அவர்கள் விடுதலை பெறுவதற்கான உரிமை இருந்தும், அதனை மதத்தின் பெயரால் மறுத்து வருவது மனிதத்தை மறுக்கும் மதவாதப்போக்கு இல்லையா? 'வகுப்புவாத மோதல்களில் தொடர்புடையோரை விடுதலைசெய்ய மாட்டோம்' என அரசாணை வெளியிட்டு, இசுலாமியச் சிறைவாசிகளின் விடுதலைக்குக் கேடு விளைவித்த திமுக அரசு, எதிர்ப்பு வந்தவுடன் அதனை ஈடுகட்ட, விடுதலை குறித்து ஆராய்வதற்கெனக் கூறி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்தது. அக்குழு அமைக்கப்பட்டு ஏறக்குறைய இரண்டாண்டுகளாகியும் இன்றுவரை எவ்வித முன்நகர்வையும் செய்யாது, திமுக அரசு காலங்கடத்திக் கொண்டிருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.

வயது முதிர்வு மற்றும் உடற்பிணி காரணமாக தளர்ந்து வாழ்வின் இறுதி நாட்களையாவது தம் குடும்பத்தினருடன் வாழ்ந்திட வேண்டி கருணை அடிப்படையில் சிறைவிடுப்பு கேட்டு இசுலாமியச் சிறைவாசிகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவினைக்கூட தள்ளுபடி செய்யக்கோரி, திமுக அரசு பதில் மனு தாக்கல் செய்தது இசுலாமிய மக்களுக்குச் செய்த பச்சைத்துரோகம் இல்லையா? பல ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் மற்றும் திருமங்கலத்தில் நடைபெற்ற இரண்டு கொலைகளை காரணம் காட்டி, '25 ஆண்டுகளுக்கு முன் இசுலாமியச் சிறைவாசிகள் எந்த மனநிலையில் சிறைக்கு சென்றார்களோ அதே மனநிலையில்தான் இன்றும் உள்ளனர், அதனால் அவர்கள் கருணை அடிப்படையில் கேட்ட சிறை விடுப்பினைகூட தரக்கூடாது' என்று சிறிதும் மனச்சான்று இன்றி திமுக அரசு தாக்கல் செய்த பதில்மனு அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் நிலைப்பாடேயாகும். எக்காரணம் கொண்டும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்துவிடவே கூடாது என்ற திமுக அரசின் கொடூரமான உறுதிப்பாடுதான் இச்செயல்களில் வெளிப்படுகிறது.

தேர்தலின்போது இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என்று வாக்குறுதி அளித்து இசுலாமிய மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது எவ்வளவு பெரிய ஏமாற்றத்தையும், வலியையும் அம்மக்களுக்கு அளிக்கும் என்பதை இந்த அரசு உணரத் தவறியதேன்?

'இசுலாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள்' என முத்திரைக் குத்தி மதத்தின் பெயரால் மக்களைப் பிளந்து பிரித்து, வெறுப்பையும், வன்மத்தையும் வளர்க்கும் பாஜகவின் செயலுக்கும், 'இசுலாமியர் என்பதால், விடுதலை செய்ய முடியாது' என்கிற திமுகவின் மதப்பாகுபாட்டு நிலைப்பாட்டுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? பாஜகவை அடியொற்றி செல்கிறதா திமுக அரசு? அல்லது பாஜகவுக்குப் பயப்படுகிறதா?

'சிறுபான்மையினர்' என்று பெரும்பான்மைத் தமிழர்களான இசுலாமியர்களை விளித்து, அவர்களது காவலரெனத் தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசு, அம்மக்களைக் காக்கும் முறை இதுதானா? இசுலாமியர்களை நாங்கள் பாதுகாப்போம் என்று திமுக கூறுவது அவர்களைச் சிறையிலேயே வைத்து பாதுகாப்பதைத்தானா?

ஆகவே, மதத்தினை அளவுகோலாகக் கொண்டு மகத்தான மானுட உரிமையான விடுதலையை மறுக்கும் போக்கைக் கைவிட்டு, 10 ஆண்டுகளைக் கடந்த இசுலாமியச் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். அதனைச் செய்ய மறுக்கும்பட்சத்தில், மீண்டும் மக்களைத் திரட்டி மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என அறிவிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்