கனியாமூர் தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்: முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
|கனியாமூர் தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்காவது தனி அதிகாரியை நியமித்து, தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும். இவ்வாறு செய்தால் பள்ளி மாணவ, மாணவிகள் மன உளைச்சலின்றி கல்வியில் கவனம் செலுத்திட இயலும்.
மாணவர்களின் கல்வி நலனை கவனத்தில் கொண்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணையை விரைவாக முடித்து, அதன் பின்னர் பள்ளி புனரமைப்பு பணிகளை அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் மேற்கொண்டு பள்ளியைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி நிர்வாகமே புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட கலெக்டர் அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.
ஸ்ரீமதி மரணம் குறித்து அமைக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக விசாரணை நடத்தி விரைவில் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்ய வேண்டும். அப்பாவிகளை கைது செய்வது, குண்டர் சட்டத்தில் வழக்கு தொடுப்பது, சிறையில் அடைப்பது போன்ற போலீசாரின் நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.