கொள்ளிடத்தில் 10 புதிய மணல் குவாரிகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
|கொள்ளிடத்தில் 10 புதிய மணல் குவாரிகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாட்டில் கொள்ளிடம் ஆற்றில் 11 மணல் குவாரிகள் உள்பட மொத்தம் 25 மணல் குவாரிகள் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 10 மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்த மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 20 மணல் குவாரிகள் செயல்படும். 87 கி.மீ தொலைவுக்குள் 20 மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், அதைவிடக் கொடூரமாக கொள்ளிடம் ஆற்றை சீரழிக்க முடியாது.
கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீ-க்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு 10 கிமீ-க்கு 2 மணல் குவாரிகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை சீரழித்து வருகிறது. காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிப்பது தான் அரசு செய்ய வேண்டிய செயலாகும். அதை விடுத்து குவாரிகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது.
கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மண்ணையும், மக்களையும், நீர்வளத்தையும் காக்க மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.