திருநெல்வேலி
அரசு பள்ளி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு; பெயிண்டர் கைது
|நெல்லை அருகே அரசு பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே தச்சநல்லூர் மணிமூர்த்தீஸ்வரம் வாழவந்தஅம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரின் மகன் விமல்குமார் (வயது 50). இவர் மானூர் அருகே தென்கலத்தில் இருந்து ரஸ்தா செல்லும் சாலையில் உள்ள நாஞ்சான்குளம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் பாஸ்கர் (33) என்பவரிடம் கடன் வாங்கி இருந்தாராம். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலையில் விமல்குமாரிடம் கொடுத்த பணத்தை பாஸ்கர் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விமல்குமாரை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விமல்குமார் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தார்.