தேனி
இ-சேவை மையத்தில் செயல்படும் அரசு பள்ளி
|ஆண்டிப்பட்டி அருகே இ-சேவை மையத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது
ஊராட்சி ஒன்றிய பள்ளி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரிக்குண்டு ஊராட்சியில் எரதிமக்காள்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து இருந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது.
இ-சேவை மைய கட்டிடம்
அதன் பின்னர் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தின் ஒரு பகுதியிலும், 4, 5-ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு அந்த கிராமத்தில் செயல்படாமல் உள்ள இ-சேவை மைய கட்டிடத்திலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மற்றொரு அரசு பள்ளி கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடத்ைத கட்ட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.