கரூர்
அரசு பள்ளியில் தீ விபத்து: விடைத்தாள்கள் எரிந்து நாசம்
|கரூர் அருகே அரசு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்களின் விடைத்தாள்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆண்டிபட்டி கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆயுதபூஜையை முன்னிட்டு தற்போது பள்ளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை ஆகும். இந்தநிலையில் நேற்று மதியம் பள்ளியின் மேல்தளத்தில் உள்ள ஒரு அறையில் இருந்து கரும்புகை வெளியானது. இதைக்கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்து விட்டு பள்ளிக்கு சென்று பார்த்தார்.
விடைத்தாள்கள் நாசம்
அப்போது பள்ளியின் மேல் தளத்தில் உள்ள ஆசிரியர்கள் ஓய்வறையிலும், கீழ்தளத்தில் உள்ள ஓய்வறையிலும் இருந்த மாணவ-மாணவிகளின் நோட்டுப்புத்தகங்கள் மற்றும் முதல் இடை பருவத்தேர்வு, காலாண்டுத்தேர்வின் விடைத்தாள்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் நோட்டுப்புத்தகங்கள், விடைத்தாள்கள் தீயில் எரிந்து நாசமானது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த 3 குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேறிக்கொண்டிருந்தது. இந்த தீ விபத்து குறித்து பள்ளி தரப்பில் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, பள்ளிக்கு தீ வைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.