திருவாரூர்
அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்
|திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே அரசு- தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
கோட்டூர்:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே அரசு- தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
அரசு- தனியார் பஸ்
சேலத்தில் இருந்து நாகை மாவட்டம் வேதராண்யம் நோக்கி அரசு பஸ் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் நேற்று மதியம் சென்றது. இந்த பஸ்சை டிரைவர் செந்தில்நாதன் ஓட்டினார்.
இதே சாலையில் எதிர் திசையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் தனியார் பஸ் வந்தது. கோட்டூர் அருகே கீழகண்டமங்களம் சாலை பிரிவில் இந்த பஸ்கள் எதிர் எதிரே வந்து கொண்டிருந்தன. அப்போது கீழகண்டமங்கலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மணக்கரையை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 60), கீழகண்டமங்கலம் பிரிவு சாலையில் இருந்து திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் பஸ்கள் வருவது தெரியாமல் சாலையில் ஏறியதாக கூறப்படுகிறது.
நேருக்கு நேர் மோதல்
இதனால் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினர். அப்போது எதிரே வந்த அரசு பஸ் மீது தனியார் பஸ் நேருக்கு நேர் மோதியது.
இதில் 2 பஸ்களின் டிரைவர்கள் - கண்டக்டர்கள் உள்பட பஸ்களில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்த விபத்தில் தர்மலிங்கமும் காயம் அடைந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.