< Back
மாநில செய்திகள்
நாளை நடைபெற இருந்த  முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

நாளை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
22 Jun 2024 10:31 PM IST

ஒத்தி வைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்.டி, எம்.எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதிப் பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்.பி.இ.எம்.எஸ்.) நடத்துகிறது.

நாடுமுழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டி.ஜி.எச்.எஸ்.) மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்.சி.சி.) ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டி.எம்.இ.) நடத்தி வருகிறது.

இந்த சூழலில் 2024-25-ம் கல்வி ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை நடைபெறும் ( ஜூலை 7-ம் தேதி) என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை நீட் தேர்வின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யும் பொருட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித்தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டுள்ளநிலையில் முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்