< Back
மாநில செய்திகள்
நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

"நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
9 Jun 2022 4:01 PM IST

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


சென்னை,

மத்திய அரசு அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையையும், தமிழ்நாடு அரசு அதன் ஊக்கத்தொகையையும் உயர்த்துவதன் மூலம் நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

"2022-ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்தியுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2040, சன்ன ரக நெல்லுக்கு ரூ.2060 விலை கிடைக்கும். மாநில அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்தால் முறையே ரூ. 2115, ரூ.2160 கிடைக்கும். இது போதுமானதல்ல.

2021-ம் ஆண்டில் நெல் கொள்முதல் விலையை ரூ.72 மட்டுமே மத்திய அரசு உயர்த்திய நிலையில், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.100 கொள்முதல் விலை உயர்வு சற்று அதிகம் தான். ஆனால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க இந்த விலை எந்த வகையிலும் பயனளிக்காது.

நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1,986 ஆக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் 50% ரூ.993 லாபம் சேர்த்து குவிண்டாலுக்கு ரூ.2,979 கொள்முதல் விலை நிர்ணயிப்பது தான் உழவர்களுக்கு ஓரளவாவது லாபத்தை உறுதி செய்யும்.

மத்திய அரசு அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையையும், தமிழ்நாடு அரசு அதன் ஊக்கத்தொகையையும் சற்று உயர்த்தி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க முன்வர வேண்டும். அப்போது தான் உழவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்."

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்