தமிழர்களுக்கு மட்டுமே அரசுப் பணி: அரசாணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
|தமிழர்களுக்கு மட்டுமே அரசு பணி என்ற நிலையை உருவாக்க தேவையான அரசாணைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 1,060 பணியிடங்களை நிரப்ப 2 ஆயிரத்து 148 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் குஜராத், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்களில் குறைந்தது 50 பேருக்காவது விரிவுரையாளர் பணி கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு கிடைக்கவிருந்த ஆசிரியர் பணி பறிக்கப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள இதர தேர்வு முகமைகளை பொறுத்தவரையில், கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்படும் என்று கடந்த டிசம்பர் மாதமே அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதன்பின் 8 மாதங்களாகியும் அரசாணைகள் பிறப்பிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல், தமிழர்களுக்கு மட்டுமே அரசு பணி என்ற நிலையை உருவாக்க தேவையான அரசாணைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.