கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு அரசே முழு காரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
|கள்ளக்குறிச்சி விவகாரத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரித்தால் விசாரணை நேர்மையாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
சென்னையில் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அனைவருக்கும் அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என விதிகளுக்கு உட்பட்டு அறவழியில் பேச வாய்ப்பு கேட்டோம்; ஆனால் பேரவைத் தலைவர் அப்பாவு பேச வாய்ப்பு தரவில்லை; பேரவைத் தலைவருக்கு மனு அளித்து பேச வாய்ப்பு கேட்டோம் ஆனால் பேச அனுமதிக்கவில்லை; ஒரு நல்ல அரசுக்கு அடையாளம் எதிர்க்கட்சியை பேச விட்டு அதற்கு ஏற்ற பதிலளித்து, பிரச்சனைகளை சரி செய்வது தான் . சட்டப்பேரவை தலைவர் நடுநிலையாக நடந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு அரசே முழு காரணம்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரித்தால் விசாரணை நேர்மையாக இருக்காது. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் முதல் அமைச்சர் கள்ளக்குறிச்சி செல்லவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது" என்றார்.