மயிலாடுதுறை
சீர்காழியில், அரசு பணியாளர்கள் வேலை நிறுத்தம்
|பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி தாலுகா அலுவலகம்
அதன் அடிப்படையில் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார், சமூக நலத்துறை, குடிமை பொருள் வழங்கல், மண்டல தாசில்தார்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதே போல் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒன்றிய ஆணையர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிட்ட ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.
பொதுமக்கள் பாதிப்பு
இந்த போராட்டம் பற்றி பெரும்பான்மையான பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. இதனால் நேற்று சீர்காழி தாசில்தார் அலுவலகம், சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகத்திற்கு பணிகள் நிமித்தமாக வந்திருந்தனர்.
ஆனால் அலுவலர்கள், பணியாளர்கள் யாரும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். அரசு ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.