பாம்பன் பாலத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது - 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
|பாம்பன்ரோடு பாலத்தின் நுழைவுப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் லேசான காயத்துடன் 30 பயணிகள் உயிர் தப்பினர்.
மதுரையில் இருந்து நேற்று காலை 7.45 மணிக்கு ராமேசுவரத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த டிரைவர் ராஜ்ஜியம்(வயது 42) ஓட்டினார். இந்த பஸ், நேற்று காலை சுமார் 10.30 மணிக்கு பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதியான மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே வந்து கொண்டு இருந்தது.
இந்த பஸ் முன்பு ராமேசுவரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதையடுத்து மதுரை அரசு பஸ் டிரைவர் அந்த பஸ்சின் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், மண்டபம் கடற்கரை பூங்கா சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுச்சுவரில் மோதி நின்றது.
இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து பஸ்சில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டபோது பாம்பன் ரோடு பாலம் மற்றும் மண்டபம் கடற்கரை பூங்கா வரையிலும் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.