காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி
|ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி பலியானார்.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வினய் குமார் (வயது 25). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கம் பகுதியில் குன்றத்தூர் தாம்பரம் கூட்டு சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டார். இந்த விபத்தில் வினய் குமார் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.