< Back
மாநில செய்திகள்
ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
மாநில செய்திகள்

ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

தினத்தந்தி
|
5 May 2023 12:03 AM GMT

மாமல்லபுரம் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள். மகனின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு திரும்பியபோது இந்த பரிதாபம் நிகழ்ந்துவிட்டது.

மாமல்லபுரம்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் விஜய் என்ற ரங்கநாதன். இவருக்கு வருகிற 25-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டது. அதனை திண்டிவனம் அருகில் உள்ள தங்கள் குலதெய்வம் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு, உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றனர்.

இதற்காக கோவிந்தன் தனது ஆட்டோவில் மனைவி அமுல் (48), தாயார் காமாட்சி (75), மகள் சுகன்யா (32), பேத்திகள் கனிஷ்கா (6), ஹரிப்பிரியா (8) ஆகியோருடன் திண்டிவனம் அருகில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கடப்பாக்கம், செய்யூர் பகுதிகளில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்று திருமண அழைப்பிதழை கொடுத்தார்.

6 பேர் பலி

இறுதியாக செய்யூர் அடுத்த செங்காட்டூரில் உள்ள தனது மகள் சுகன்யா வீட்டுக்கு சென்று முறைப்படி மருமகனுக்கும் பத்திரிகை வைத்துவிட்டு 6 பேரும் மீண்டும் ஆலந்தூர் நோக்கி வந்தனர்.

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை வழியாக மணமை அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி ேநாக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் எதிரே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த இவர்களது ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

ஆட்டோவில் பயணம் செய்த கோவிந்தன், அவரது 2 பேத்திகள் உள்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். அரசு பஸ்சில் பயணம் செய்த 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

கலெக்டர் ஆறுதல்

இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான 6 பேர் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலியானவர்களின் உடல்களை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜஸ்ரீ, துணை முதல்வர் டாக்டர் அனிதா உடனிருந்தனர்.

விபத்தில் சிக்கிய அரசு பஸ்சில் இருந்த 35 பயணிகள் மாற்று பஸ் மூலம் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து நடந்த இடத்தில் சுகன்யா தனது மாமியார் வீட்டில் இருந்து தனது தாய் வீட்டுக்கு கொண்டு வந்த வேர்க்கடலை, மாங்காய் போன்ற பொருட்கள் சாலையில் சிதறி கிடந்தன. விபத்து காரணமாக மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்படுவதால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று குறுகிய சாலையில் முந்தி செல்லும்போதும் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது, மணமகன் விஜயை தவிர அவரது குடும்பத்தினர் அனைவரும் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் ஆலந்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுததியது.

மேலும் செய்திகள்