அரியலூர்
அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
|நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் கண்டுகொள்ளாததால் அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரி செய்வதாக உறுதி
அரியலூர் அரசு கலைக்கல்லூரி அருகே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுகளை சுத்திகரிக்கும்போது அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் அருகே கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் வாந்தி-மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாவதாகவும் கூறி கடந்த வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உறுதி அளித்தார். அதன்பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
வகுப்பு புறக்கணிப்பு
இந்நிலையில் தற்போது வரை இந்த பிரச்சினை சரி செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி முதல்வர், வகுப்பு அறைகளை மாற்றித்தருவதாக உறுதியளித்தார். எனினும் மாணவர்கள் இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்போவதாக கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.