< Back
மாநில செய்திகள்
கோவிந்தா... கோவிந்தா.. பக்தி கோஷங்கள் முழங்க திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
சென்னை
மாநில செய்திகள்

கோவிந்தா... கோவிந்தா.. பக்தி கோஷங்கள் முழங்க திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

தினத்தந்தி
|
3 Jan 2023 1:55 PM IST

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கோவிந்தா, கோவிந்தா... என்ற பக்தி கோஷங்கள் முழங்க சொர்க்கவாசல் நேற்று திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

108 திவ்யதேசங்களில், 'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பெருமாள் கோவில் மிக சிறப்புக்கு உரியதாக அமைந்துள்ளது.

திருவல்லிக்கேணி தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜூனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது. இங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோக சயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த மாதம் 23-ந்தேதி திருமொழித்திருநாள் உடன் பகல்பத்து 1-ம் திருநாள் தொடங்கி கடந்த 1-ந்தேதி வரை பகல் பொழுதில் நடக்கும் பகல்பத்து திருவிழாக்கள் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 2.30 மணியில் இருந்து மூலவர் தரிசனம் நடந்தது. அதிகாலை 4.15 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் உபயநாச்சியார்களுடன் உள்பிரகார புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அப்போது சிறப்பு அலங்காரத்தில் பரமபதவாசல் அருகே பார்த்தசாரதி பெருமாள் உபயநாச்சியார்களுடன் நம்மாழ்வாருக்கு காட்சி தந்தார். அப்போது வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து திருவாய்மொழி மண்டபத்தில் உள்ள புண்ணிய கோடி விமானத்தில் பார்த்தசாரதி பெருமாள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோவிந்தா.. கோவிந்தா... என பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்காக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி உற்சவர், நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.

கோவிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை பக்தர்கள் பார்க்கும் வகையில், எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னை மாநகராட்சி மூலம் அனைத்து சுகாதாரப்பணிகளும், அவசர உதவிக்காக சிறப்பு மருத்துவ குழுக்களும் செயல்பட்டன. பாதுகாப்பு வசதி பக்தர்கள் பாதுகாப்புக்காக 4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள், அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கோவில் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

இருப்பினும் சொர்க்கவாசல் திறப்பு நேரத்தில் நெரிசல் ஏற்பட்டதால் வயதான பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.

விழாவையொட்டி வருகிற 12-ந்தேதி வரை திருவாய்மொழி திருநாள் எனப்படும் இராப்பத்து நிகழ்ச்சி நடக்கிறது. இதில் வருகிற 6-ந்தேதி ரத்தினங்கி சேவையும், 8-ந்தேதி உற்சவர் முத்தங்கிசேவையும் நடக்கிறது.

தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் வெங்கடேசபெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக நள்ளிரவு 12.10 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி கோவில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு 9 மணி வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்தனர். லட்டு, குங்குமம், கற்கண்டு மற்றும் ஆன்மிக புத்தகம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில உள்ளூர் ஆலோசனைக்குழுத் தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ந.கங்காதரன் செய்திருந்தார்.

இதேபோன்று, மயிலாப்பூரில் உள்ள மாதவப்பெருமாள், ஆதிகேசவப்பெருமாள் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், வில்லிவாக்கம் சவுமியா தாமோதர பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புகைப்பட கலைஞர் மரணம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது சென்னை இந்து ஆங்கிலப்பத்திரிகையின் புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் (வயது 56) கோவில் நிகழ்ச்சிகளை படம் எடுத்து கொண்டு இருந்தார். அப்போது திடீர் என்று மயங்கி அருகில் இருந்தவர் மீது சாய்ந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கே.வி.சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்