புதுக்கோட்டை
புதுக்கோட்டைக்கு கவர்னர் வருகை திடீர் ரத்து
|புதுக்கோட்டைக்கு கவர்னர் வருகை திடீர் ரத்து செய்யப்பட்டது.
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48-ம் ஆண்டு விழா வருகிற 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். நிறைவு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பதாக இருந்தது. இதற்காக அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் சமீபத்தில் கவர்னரின் நடவடிக்கையால் பெரும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் புதுக்கோட்டை கம்பன் கழக விழாவில் பங்கேற்க இருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர். மேலும் அவர் புதுக்கோட்டை வரும் தினம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவும் சிலர் அறிவித்தனர்.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி புதுக்கோட்டை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கம்பன் கழக நிறைவு விழா அழைப்பிதழில் அவரது பெயர் எடுக்கப்பட்டு வேறு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவியின் புதுக்கோட்டை வருகை ரத்து செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.