மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்கள் இல்லாத வெற்று கட்டுக்கதையே கவர்னர் உரை - டிடிவி தினகரன்
|கவர்னருக்கும் அரசுக்கும் இடையே நீடிக்கும் மோதல் போக்கு மாநிலத்திற்கு மட்டுமல்லாது மக்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்தின் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவின் போது தேசிய கீதம் இசைக்கப்படுவது தான் மரபு. நீண்ட கால மரபை மீற வலியுறுத்தியதோடு, ஏற்கனவே ஒப்புதல் அளித்த தன் உரையை முழுமையாக கவர்னர் புறக்கணித்திருப்பது அவர் வகிக்கும் உயரிய பதவிக்கு அழகல்ல.
அதே நேரத்தில், கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் சமரசமற்ற அணுகுமுறை கடைபிடித்து வருவது போன்ற தகவல் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் உண்மைக்கு மாறான விவரங்களை அளித்து உரையாற்றுமாறு கவர்னரை கட்டாயப்படுத்தும் தி.மு.க. அரசின் நடவடிக்கையும் கடும் கண்டனத்திற்குரியது.
631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 6.64 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்திருப்பதாக கவர்னர் உரையில் கூறியிருக்கும் தமிழக அரசு, எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடுகள் செய்துள்ளன என்ற விவரத்தையும், அதன் மூலம் எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என்பதையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா?
பணவீக்கத்தை கட்டுப்படுத்தியதாக பெருமைப்படும் அரசாங்கம், இந்தியாவில் அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் முதல் மாநிலம் தமிழகம் என்பதை குறிப்பிட மறந்தது ஏன்? கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 88 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் விவரங்கள் கவர்னர் உரையில் இடம்பெற்றிருப்பதன் மூலம், தமிழக மீனவர்கள் கைதை தடுத்து நிறுத்த இந்த அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதன் மூலம், இட ஒதுக்கீட்டையும், சமூக நீதியையும் பாதுகாக்க அவசியமாகும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.
மொத்தமாகப் பார்க்கும் போது, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வளர்ச்சிக்கான கொள்கைகளோ, மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களோ இல்லாத தி.மு.க. அரசு தயாரித்த கவர்னரின் உரை வெற்று கட்டுக்கதையாகவே உள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், அரசின் உரையை புறக்கணிக்கும் கவர்னர், கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் தமிழக அரசு, என வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கும் வகையில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் வருத்தமளிக்கிறது. கவர்னருக்கும் அரசுக்கும் இடையே நீடிக்கும் மோதல் போக்கு மாநிலத்திற்கு மட்டுமல்லாது மக்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதை இருதரப்பும் இனியாவது உணர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.