< Back
மாநில செய்திகள்
கவர்னரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல்: தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் - சீமான்
மாநில செய்திகள்

கவர்னரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல்: தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் - சீமான்

தினத்தந்தி
|
9 Jan 2023 10:35 AM GMT

கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

கவர்னரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் தனது உரையில் படிக்க மறுத்ததை ஒருபோதும் ஏற்க முடியாது.

இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலாகும்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் அவமதித்துள்ளார்.

தமிழ்நாட்டு ஆளுநரின் இத்தகைய தரம் தாழ்ந்தப்போக்கினை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப் பொறுப்பாளரான ஆளுநர் தமது மலிவான நடவடிக்கையால் தமிழ்நாடு அரசினையும், மக்களாட்சி முறைமையினையும் மட்டும் அவமதிக்கவில்லை.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்துள்ளார். உடனடியாக ஆளுநர் ஐயா ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்