மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே முயற்சி.. அமைச்சர் ரகுபதி சாடல்
|10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; "10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் 2வது முறையாக மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பியதால் சட்டப்படி கவர்னர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியுள்ளார். 2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியது தவறு. ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்புகிறார்.
தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் கவர்னர் செயல்படுகிறார். துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயம். ஜனநாயகத்தை காப்பதற்காகவே மசோதாக்களை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினோம்.
கவர்னர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் 10 மசோதாக்களை உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் அனுப்பியுள்ளார்.தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியால் நிர்வாகம் முடங்கியுள்ளது. தமிழ்நாடு கவர்னரை திரும்பப் பெறுவதுதான் ஒரே தீர்வு." இவ்வாறு அவர் கூறினார்.