"இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தை நிறுத்துங்கள் கவர்னரே" - சு.வெங்கடேசன் எம்.பி.
|இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தை நிறுத்துங்கள் கவர்னரே என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"கவர்னரின் செய்திகுறிப்பு நிறுத்தி வைப்பு... கவர்னரை நீக்க இராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை கவர்னரே. இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள். தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.