இந்தி, சமஸ்கிருதத்தை கவர்னர் ஆதரித்து பேசுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல - திருநாவுக்கரசர் எம்.பி
|இந்தி, சமஸ்கிருதத்தை கவர்னர் ஆதரித்து பேசுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம்
திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தில் முடிவுபெறாத ஒரு பகுதியை முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பாலம் கட்டுமான பணிகளை திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறி இருக்கிறார். ஒரு தலைவருக்கு கட்சி நிர்வாகிகளிடம் கெஞ்சுவதற்கும், கொஞ்சுவதற்கும், மிஞ்சுவதற்கும் உரிமை இருக்கிறது. ஜெயலலிதா மட்டும் தவறு செய்த கட்சியினரை தூக்கிலேயா போட்டுவிட்டார்?. நடவடிக்கை தான் எடுப்பார்.
வரையறுக்கப்பட்ட அதிகாரம்
சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே கடிதம் எழுதி இருக்கும் விவகாரத்தில் சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என எனக்கு தெரியாது. அவர்களின் கட்சி, அங்கீகாரம், சின்னம் தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டியது தேர்தல் கமிஷனும், கோர்ட்டும் தான். சட்டமன்றத்தில் இருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து அமர வைக்க வேண்டும்.
கவர்னர் ஆர்.என்.ரவி, திருக்குறள், கம்பராமாயணம் என பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் இங்கு தமிழ் பாடம் நடத்த வரவில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக இருந்து செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சருக்கு கூடுதல் அதிகாரம் இருக்கிறது. நியமிக்கப்படும் கவர்னருக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரம் தான் உண்டு.
ஜனநாயகத்துக்கு நல்லதல்ல
அதை விடுத்து அவர் மொழி பற்றி பேசுவது. இந்தி, சமஸ்கிருதத்தை ஆதரித்து பேசுவது அவருக்கும், ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல. தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தன்னம்பிக்கையின் அடிப்படையில் கூறி இருக்கலாம். அதற்காக தனியாக போட்டியிடுவார்கள் என்று அர்த்தம் அல்ல. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்து போட்டியிடும் முடிவை எடுக்க மாட்டார். இந்த கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.