இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவராக மோடி திகழ்கிறார் - கவர்னர் ஆர்.என்.ரவி
|இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவராக மோடி திகழ்கிறார் என்று திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
தலைமை பண்பு குறித்து கருத்தரங்கு
திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) தலைமை பண்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நேற்று காலை நடந்தது. ஐ.ஐ.எம். இயக்குனர் பவன்குமார்சிங் தலைமை தாங்கினார். டீன் சரவணன் முன்னிலை வகித்தார். தமிழக கவர்னர் ஆா்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தற்போதைய போட்டி நிறைந்த உலகில் தலைமை பண்புடன் சிறந்து விளங்குவதற்கு புதிய திறன்களை இளைஞர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா
சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அத்தகைய ஒரு தலைவர் தான் நமது பிரதமர். இந்தியாவில் ஊழல் ஒரு பிரச்சினையாக இருந்தது. பயனாளிகளுக்கு ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், பயனாளிகளுக்கு 15 பைசா தான் சென்றடைகிறது. மீதம் 85 பைசா ஊழல் செய்யப்பட்டு விடுகிறது. இதை கருத்தில் கொண்டு தான் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் உருவாக்கினார்.
இதற்காக ஜன்தன் வங்கி கணக்குகளை தொடங்க வைத்தார். இப்போது நாட்டில் 5 மில்லியன் ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 56 சதவீதம் பெண்கள் ஆவர். தற்போது நலத்திட்டங்கள் அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக சென்றுவிடுகிறது. இடையில் எவராலும் சுரண்ட முடியாத நிலையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். விவசாயிகளுக்கும் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவராக மோடி திகழ்கிறார்.
5-வது இடத்தில் இந்தியா
முத்ரா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரூ.27 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் சிறுதொழில் தொடங்க வழிவகை செய்யட்டுள்ளது. மேலும் உலகில் பொருளாதார சக்திமிக்க நாடுகளில், 5-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. 2047-ம் ஆண்டு இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, சுயசார்புள்ள, உலகத்தின் முதன்மை நாடாக, வல்லரசு நாடாக இந்தியா விளங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வரவேற்பு
விழாவில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் அபிஷேக் டோடாவர் நன்றிகூறினார். முன்னதாக திருச்சி வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.