மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி
|நெல்லைக்கு இன்று (சனிக்கிழமை) கவர்னர் ஆர்.என்.ரவி வருகிறார்.
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 30-வது பட்டமளிப்பு விழா இன்று (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காலை 7.25 மணிக்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு காலை 9 மணி அளவில் வந்து சேருகிறார். பின்னர் காலை 10 மணிக்கு வ.உ.சி. அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். மேலும் பதக்கம் பெறும் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பிற்பகலில் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு கார் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி அவர் செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்து, சாலை சீரமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. மேலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.