'கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும்' - முத்தரசன்
|இனியும் கவர்னர் ஆர்.என்.ரவி பதவியில் நீடிப்பது சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பானது என முத்தரசன் தெரிவித்தார்.
சென்னை,
திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி மீதான தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. இதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை.
இந்நிலையில் கவர்னர் ஆர்.என். ரவி முதல்-அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்ததோடு பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு மறுப்பும் தெரிவித்திருந்தார். இதையடுத்து கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொன்முடி மீதான தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்த பிறகு, பதவி பிரமாணம் செய்ய மறுப்பதற்கு கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியதுடன், இவரை நியமிக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் கூறினால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக கவர்னர் அதை செய்யத்தான் வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சட்டத்தை மதிப்பவர் என்றால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருடன் இணக்கமாக இருந்தார். ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி தனது நிலைப்பாட்டில் இருந்து சிறிதும் மாறவில்லை. சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டையும் மதிப்பவராக இருந்தால் உடனடியாக கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும். அவர் இனியும் பதவியில் நீடிப்பது சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பானது. அவர் பதவி விலக முன்வரவில்லை என்றால், ஜனாதிபதி அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்."
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.