கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலகி வெளிப்படையாக ஆர்எஸ்எஸ் தொண்டராக பணியாற்ற வேண்டும் - திருமாவளவன்
|கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலகி, வெளிப்படையாக ஆர்எஸ்எஸ் தொண்டராகவே பணியாற்ற வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை,
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானக் கூறுகளாகத் திகழும் சமத்துவம், சமூகநீதி போன்றவற்றைக் கொச்சைப்படுத்தியும்; அவற்றுக்கு நேரெதிரான சனாதனத்தைப் போற்றியும் தொடர்ந்து பேசி வருகின்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்
புரட்சியாளர் அம்பேத்கர் வலியுறுத்திய சமத்துவத்தையும், தந்தை பெரியார் உயர்த்திப் பிடித்த சமூக நீதியையும், மாமேதை கார்ல் மார்க்ஸ் முன்மொழிந்த சம தர்மத்தையும் உள்ளீடாகக் கொண்ட ஒரு கோட்பாடுதான் தமிழ்மண்ணில் வெகுமக்களிடையே வலுப்பெற்றுள்ள திராவிடம் என்பதாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியாக இருக்கின்ற நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் சனாதன எதிர்ப்புப் பெயர்ச்சொல் தான் திராவிடம் என்பதாகும். இந்தத் திராவிடக் கருத்தியலை அடித்தளமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுவதால் தான் இது 'திராவிட முன்மாதிரி ஆட்சி' என்று அழைக்கப்படுகிறது.
பிறப்பின் அடிப்படையில் உயர்வுத் தாழ்வைக் கற்பித்து உழைக்கும் மக்களை சாதி அடிப்படையில் பாகுபடுத்தும் பிரிவினைவாத பிற்போக்குக் கருத்தியலான சனாதனத்துக்கு முற்றிலும் நேர் எதிரானதே திராவிடக் கருத்தியலாகும். சனாதனத்தைப் போற்றும் ஆளுநரால் இதனைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த வயிற்றெரிச்சலில்தான் வாய்க்கு வந்தபடி அவர் உளறுகிறார்.
'திராவிடக் கருத்தியல் காலாவதியான ஒன்று' என அண்மையில் தெரிவித்திருக்கிறார். அது அவரது அரசியல் அறியாமையை மட்டுமல்ல; அவருக்குள் இருக்கும் திராவிடக் கருத்தியலுக்கு எதிரான வெறுப்பையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் திராவிட முன்மாதிரி அரசு- கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதார வளர்ச்சியில், தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநில அரசு என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறது.
ஆனால், சனாதனத்தைப் போற்றுகிற இந்திய ஒன்றிய பாஜக அரசோ வேலைவாய்ப்பின்மையை, விலைவாசி ஏற்றத்தை, பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி எல்லா தளங்களிலும் தோல்வியடைந்து வெகுமக்களுக்கு எதிரான அரசாக இருக்கிறது. நாடறிந்த இவ்வுண்மையை ஆளுநர் ரவி அவர்களால் மறுக்க முடியுமா?
பெரியாரின் சிந்தனைகளுக்கும் திமுக அரசுக்கும் எதிராகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு உழைக்கும் எளிய மக்களின் நலன்களுக்கு எதிராகவும்; மதத்தின் பெயரால் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் நோக்கிலும் தொடர்ந்து திட்டமிட்டே பேசியும், செயல்பட்டும் வருகிற ஆளுநர் அவர்கள், இங்கே சமூக அமைதியை சீர்குலைத்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை சீரழிக்கப் பார்க்கிறார்.
ஆன்லைன் ரம்மி மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் பலரது சாவுக்குக் காரணமாக இருந்த அவர், 'ஒரு மசோதாவைக் கிடப்பில் போட்டால் அது செத்துவிட்டது என்று அர்த்தம்' என்று அகந்தை மேலோங்கப் பேசினார். ஆனால், அவரைக் கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் பதறியடித்துக் கொண்டு அவசர அவசரமாக அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
அப்போது செத்துப்போனது அந்த மசோதாவோ, அல்லது அதை இயற்றிய சட்டப்பேரவையோ அல்ல; ஆளுநரின் தன்மானம் தான் என்பது நாட்டு மக்களுக்கு அம்பலமானது. எனினும், அவருக்கு ஆளுநர் என்கிற அதிகாரத்தைவிட தன்மானமாப் பெரிதாகத் தோன்றும்?
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதும் அரசியல்வாதியைப் போல அன்றாடம் தேவையற்ற சச்சரவுகளை எழுப்புவதும் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
அவர் முழுநேர அரசியல்வாதியாகச் செயல்பட விரும்புவதையே அவருடைய நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, உடனடியாக அவர் பதவி விலகி, வெளிப்படையாக ஆர்எஸ்எஸ் தொண்டராகவே பணியாற்ற வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.
அடுத்து, ராஜ் பவன் என்ற தனது அரண்மனையின் பெயரை லோக்பவன் என்று மாற்றப் போவதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். அதாவது 'மக்களின் மாளிகை' என பெயர்சூட்ட விரும்புவதாக பேசியிருக்கிறார். உண்மையில்,அவர் மக்களை நேசிப்பவராக இருப்பாரேயானால் தனக்கு இவ்வளவு பெரிய மாளிகை தேவையில்லை; ஒரு சிறிய வீடு போதும் என்று தனது மாளிகையிலிருந்து வெளியேறி, மக்களின் பயன்பாட்டுக்கென அதனை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.