கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் பல்லாங்குழி ஆடுகிறார் - கி.வீரமணி
|தமிழ்நாடு அரசின் பொறுமையை, பெருந்தன்மையை பலவீனமாக கருதி கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் பல்லாங்குழி ஆட்டம் ஆடுகிறார்.
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் பொறுமையை, பெருந்தன்மையை பலவீனமாக கருதி அரசியல் பல்லாங்குழி ஆட்டம் ஆடுகிறார், கவர்னர் ஆர்.என்.ரவி. இவரது பல பேச்சுகள் அறியாமையின் அப்பட்டமாகவோ அல்லது ஆணவத்தின் உச்சமாகவோதான் தென்படுகின்றன.
அண்மையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் பற்றிய அவரது விளக்கம் கேட்டு எப்படி சிரிப்பது என்றே எவருக்கும் தெரியவில்லை. மசோதாக்களை நிறுத்தி வைத்தால் அதை நிராகரித்தது என்றே பொருள் என்றுக்கூறி தனது அரசியலமைப்பு சட்ட அறியாமையை வெளிச்சம் போட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தகவல் தொடர்பாளராக உச்ச, உயர்நீதிமன்றங்கள் நிலைப்பாட்டுக்கு விரோதமாக நடந்து அதனை தட்டிக் கேட்டு போராடியவர்களை கொச்சைப்படுத்தி பேசி கண்டனத்துக்கு உள்ளானார். கவர்னரின் அடாவடித்தனத்தை அப்பட்டமாக தோலுரித்து காட்டி உள்ளது நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிக்கை. மக்கள் தீர்ப்பே இறுதி என்ற அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த மக்கள் திரள்வதுதான் ஒரே வழி.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை தேக்கத்துக்கு உரியதாக்கி நியமன அதிகாரியானவருக்கு எந்த வகையில் நியாயமோ, உரிமையோ உண்டா? என்ற கேள்வி எங்கும் எதிரொலிக்கட்டும். எதிர்ப்பு புயல் மய்யம் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.