< Back
மாநில செய்திகள்
நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை; அரசின் பரிந்துரை மீது கவர்னர் முடிவெடுக்கவில்லை - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
மாநில செய்திகள்

'நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை; அரசின் பரிந்துரை மீது கவர்னர் முடிவெடுக்கவில்லை' - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தினத்தந்தி
|
6 Oct 2023 5:24 PM IST

நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகளை விடுதலை செய்யும் பரிந்துரை தொடர்பாக கவர்னர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

நீண்ட காலமாக சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரியது தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த முறை இது தொடர்பான விசாரணை நடைபெற்ற போது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, 49 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 5 சிறைக்கைதிகளின் தரப்பில் ஜாமீன் கேட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது அரசு தரப்பில், நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசின் பரிந்துரை தொடர்பாக கவர்னர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு இதுபோன்ற சிறைக்கைதிகளுக்கு ஜாமீன் வழங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டி, 5 பேருக்கு ஜாமீன் வழங்க அரசுக்கு ஆட்சேபம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிறைக்கைதிகள் 5 பேருக்கும் 3 மாதங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்