< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் முன்வராதது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் முன்வராதது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
10 Feb 2023 1:51 PM IST

கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்காவிட்டால், 162-வது பிரிவை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ரியாஸ்கான் என்ற இளைஞர், செல்பேசி கடையில் பணியாற்றி ஈட்டிய வருமானம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் மனம் உடைந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரும் நிலையில், அதற்கு முடிவு கட்டுவதற்கான ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் இன்று வரை முன்வராதது கண்டிக்கத்தக்கது. புதிய திருப்பமாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்குத் தான் முழுமையான அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 246-வது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்றலாம் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, 162-வது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நிர்வாக அதிகாரமும் மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளாக பா.ம.க முன்வைத்து வரும் வாதங்கள் தான். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தில் பா.ம.க.வின் நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை மத்திய அரசின் பதில் உறுதி செய்திருக்கிறது. மத்திய அரசின் விளக்கத்திற்குப் பிறகும், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் ஆளுனர் காலந்தாழ்த்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவின்படி மாநில அரசின் நிர்வாக வரம்புக்குள் வருவதாக மத்திய அரசே அறிவித்திருக்கிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்காவிட்டால், 162-வது பிரிவை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூ யுள்ளார்.

மேலும் செய்திகள்