திருக்குறள், திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் கவர்னருக்கு இல்லை: கனிமொழி
|மும்மொழி கொள்கை அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கனிமொழி கூறினார்.
சென்னை,
சென்னை சங்கமம் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்களுடன் பொங்கல் வைத்து தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கொண்டாடினார்.
நாதஸ்வரம், நையாண்டி மேளம், ஆதிமேளம், தோடர் நடனம், கோலாட்டம் மற்றும் மல்லர் கம்பம் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1,300 கலைஞர்களுக்கு வேட்டி, சேலை சட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அவர் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-.
மும்மொழிக் கொள்கைக்கான தேவை என்னவென்று கூறினால், அதை நாம் புரிந்து கொள்ள முடியும். தற்போது மும்மொழிக் கொள்கைக்கான தேவை எதுவுமே கிடையாது. நம்முடைய பாரம்பரியம், அடையாளம் தாய் மொழி தமிழ். மற்ற மொழியினரோடு பேசுவதற்கு ஆங்கில மொழி இருக்கிறது. இதனால் ஆங்கிலம் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மற்ற பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களுடன் பேசுவதற்கு ஆங்கிலம் என்பது இணைப்பு மொழியாக உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தாண்டி மற்றொரு மொழி படிப்பது என்பது, அது அவரவருடைய விருப்பம். ஆனால் மும்மொழிக் கொள்கை என்பது அவசியம், என்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. திருவள்ளுவரை ஒரு துறவி என யாருமே கூறியது கிடையாது. அவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி இருந்ததாகவும் கருத்து இருக்கிறது. இல்லறம் குறித்து அவரைப் போல கவித்துவமாக எழுதியிருப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. திருக்குறளை படித்து புரிந்து கொள்ளக்கூடிய நாம் அவரை துறவியாக பார்த்ததே கிடையாது. திருக்குறளில் எந்த ஒரு மத அடையாளமும் கிடையாது. சனாதனம் உள்ளிட்ட வேறு எந்த மதத்தையுமே நாம் அவர் மீது திணிக்க முடியாது.
இதை அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். மதத்தை கடந்து மனிதத்தை பேசுவது தான் திருக்குறள். மனிதநேயத்துக்கு ஒரு நிறம் இருந்தால் அதுதான் திருவள்ளுவரின் நிறம். எனக்குத் தெரிந்து அடுத்த மனிதநேயத்தின் அடையாளம் பெரியார். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.