பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி கவர்னர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் - கே.பாலகிருஷ்ணன்
|பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி கவர்னர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
நேற்று (25.10.2023) கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. கவர்னர் மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுத்து நிறுத்தியதோடு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருக்க வேண்டுமென காவல்துறையை சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது.
இச்சம்பவம் குறித்து கவர்னர் மாளிகை அதிகாரி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தமிழகத்தில் ஜனநாயகப்பூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற அரசியல் கட்சிகள் மீது குறிப்பாக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். "திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பொதுக் கூட்டங்களிலும், அவர்களது சமூக ஊடகங்களிலும் அச்சுறுத்தப்படுவதாக" புகாரில் தெரிவித்துள்ளார். இது முழுக்க, முழுக்க புனையப்பட்டுள்ள கட்டுக்கதை. இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்டிருக்கிற புகார் கடும் கண்டனத்திற்குரியதாகும்.
கவர்னர் ஆர்.என். ரவி துவக்கத்திலிருந்தே மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஜனநாயக ரீதியில் செயல்பட விடாமல் அதிகார அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. மாநில அரசின் அதிகாரங்களில் தலையீடு செய்வது, மாநில மக்களின் உரிமைகளை பாதுகாத்திடும் சட்டத்தின் ஆட்சிமுறைக்கு இடையூறு செய்வது போன்ற வகையில் கவர்னரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. கவர்னரின் பேச்சுக்களும் பாராளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உள்ளன. இதன் காரணமாக ஜனநாயக சக்திகளால் கடும் விமர்சனங்களுக்கு கவர்னர் ஆட்பட்டு வருகிறார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது உள்நோக்கத்துடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட கவர்னர் முயற்சிக்கிறார். இந்த புகார் கடிதம் கவர்னரின் தான்தோன்றித்தனமான பேச்சுக்களுக்கு எதிர்வினையோ, விமர்சனமோ வரக்கூடாதென்ற நோக்கத்துடன் எதிர்கட்சிகளின் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதாகும்.
மேலும், ஏப்ரல் 2022ல் கவர்னர் தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சென்றபோது தடிகளாலும், கற்களாலும் தாக்கப்பட்டதாகவும் இது குறித்து ராஜ்பவன் காவல்துறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எந்த விதத்திலும் உண்மை இல்லை. இது குறித்து 19.4.2022 மயிலாடுதுறை காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, கவர்னர் மாளிகை அதிகாரியின் புகாரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் மீது எழுப்பப்பட்டுள்ள மிக மோசமான அடிப்படை ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த அவதூறு குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டுமெனவும் சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.